கன்னட மொழி பெயர் பலகை: ஆர்டர்கள் குவிந்ததால் பணியாளர்கள் தவிப்பு
கன்னட மொழி பெயர் பலகை: ஆர்டர்கள் குவிந்ததால் பணியாளர்கள் தவிப்பு
ADDED : மார் 04, 2024 07:03 AM

பெங்களூரு: கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்களின் போர்டுகளில், 60 சதவீதம் கன்னடம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டதால், ஒரே நேரத்தில் பலரும் பெயர் பலகை மாற்ற ஆர்டர் கொடுப்பதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் இருக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து பிப்ரவரி 28 க்குள், பெயர் பலகைகள் மாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் மாற்றப்படாதால், 15 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வணிக நிறுவனங்கள், ஒரே நேரத்தில் பெயர் பலகை மாற்ற கோரிக்கை வைப்பதால், அவற்றை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல், பெயின்ட் கடைக்காரர்கள் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
இத்தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். பெங்களூரு நகரில் 45,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பெயர் பலகை வடிவமைப்பிற்கு நிறைய நிபுணத்துவம் தேவை. அத்தகைய நிபுணர்கள் குறைவாக உள்ளனர். இதனால் அவசர அவசரமாக பெயர் பலகை தயாரிக்க முடியாது.
அதிகமானவர்களை பணியில் அமர்த்தலாம். இந்த கோரிக்கை முடிந்ததும், அவர்களுக்கு ஆண்டு முழுதும் வேலை வழங்க முடியாது. எனவே, இருக்கும் தொழிலாளர்களை வைத்து பெயர் பலகை தயார் செய்து வருகிறோம்.
திறமையான கலைஞர்கள் இல்லாததால், வியாபாரிகளின் பெயர் பலகைகளை மாற்றுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. பெயர் பலகையை மாற்ற வேண்டும் என்று ஆர்வமும், அவசரமும் கன்னடம் அல்லாத வியாபாரிகள் இடையே அதிகரித்து உள்ளது.
கன்னட எழுத்துகள் 60:40 விகிதத்தில் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

