ADDED : டிச 27, 2024 01:44 AM
சம்பல், உத்தர பிரதேசத்தின் சம்பலில் கண்டறியப்பட்ட பழமையான படிக்கிணற்றை அகழாய்வு மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட நிர்வாகம் நேற்று துவங்கியது.
உத்தர பிரதேசத்தின் சம்பலில், முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த இடத்தில் ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாதம் 24ல் தொல்லியல் துறை அதிகாரிகள், மசூதியில் இரண்டாவது முறையாக ஆய்வு செய்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, கலவரமாக மாறியது.
இதற்கிடையே, ஷாஹி ஜமா மசூதி அருகே கிணறு போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. இங்கு, ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அக்கோவிலுடன் இக்கிணறுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
படிக்கிணறு என அழைக்கப்படும் இப்பகுதியில், தொல்லியல் துறை அதிகாரிகளுடன், மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இக்கிணற்றில் தண்ணீர் இருந்ததாகவும், அதன்பின் உள்ளூர் மக்களால் ஆக்கிரமிப்புக்குள்ளாகி குப்பைகொட்டும் பகுதியாக மாறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, கிணற்று பகுதியில் தொல்லியல் துறையினருடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தினர் அகழாய்வு மேற்கொள்ளும் பணிகள் நேற்று துவங்கியது.

