சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
UPDATED : டிச 23, 2025 03:12 PM
ADDED : டிச 23, 2025 12:00 PM

நமது நிருபர்
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து, சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
வரவேற்பு
அந்தவகையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பியூஷ் கோயலை பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
சந்திப்பு
பின்னர், சென்னையில் தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆலோசனை
இதில் பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பியூஷ் கோயல் இபிஎஸ் உடன் பேசியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மையக்குழு கூட்டம்
முன்னதாக, சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து கிளம்பிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம்,' முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது' எனத் தெரிவித்தார்.
மாலையில்…!
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டியில் இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

