ADDED : ஆக 14, 2025 07:28 PM

புதுடில்லி: விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவை தொடர்ந்து ஆழ்கடலில் சாதனை படைத்த இந்தியர்கள் இருவர் நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
வட அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் நாட்டில் என்னும் நீர் மூழ்கி கப்பல் உதவியுடன் ராஜூ ரமேஷ் மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை கமாண்டர் ஜிதேந்தர் பால் சிங் ஆகியோர் முறையே ஆக.,5 மற்றும் ஆக.,6 ஆகிய தேதிகளில் 4,025 மீட்டர் மற்றும் 5,002 மீட்டர் ஆழத்திற்கு சென்று வெற்றி கரமாக ஆய்வு நடத்தி திரும்பி உள்ளனர்.
இவர்களின் சாதனை குறித்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
இந்தியா விண்வெளியை தொடர்ந்து ஆழ்கடல் பிரிவிலும் சாதனை படைத்துள்ளது. கடந்த எழுபது முதல் எண்பது ஆண்டுகளில் அதிகம் கண்டுகொள்ளாத துறையாக இருந்து வந்த விண்வெளி மற்றும் ஆழ்கடல் பிரிவில் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இது வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டலின் தொடக்கமாக அமைய கூடும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடி கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திர தின உரையின் போது ஆழ்கடல் குறித்து உரையாற்றி உள்ளார். அதில் எதிர்காலத்தில் உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் மூலம் இந்தியர்கள் ஆழ்கடலுக்குள் செல்லலாம் என பிரதமர் குறிப்பிட்டிருந்தார் என்று அமைச்சர் ஜிதேந்திரா சிங் பிரதமரின் உரையை நினைவு கூர்ந்தார்.
இச்சாதனை குறித்து மத்திய புவி அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'மனிதர்களை ஆய்வுக்காக ஆழ்கடல் பகுதிக்கு அழைத்து செல்வதற்காக இந்த பயணம் அமையப்பெற்றுள்ளது. ஆழ்கடல் குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகள் வரும் 2027 ம் ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆழ்கடல் ஆய்வு மேற்கொண்ட ராஜூ ரமேஷ், தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப பிரிவில் விஞ்ஞானியாக இருந்து வருகிறார். ஜிதேந்தர் பால் சிங் கடற்படையில் பணி புரிந்து
ஓய்வு பெற்றவர்.