பானு முஷ்டாக் விஷயத்தில் யதுவீர் 'பல்டி': கலெக்டரிடம் ஹிந்து ஜாக்ரன வேதிகே மனு
பானு முஷ்டாக் விஷயத்தில் யதுவீர் 'பல்டி': கலெக்டரிடம் ஹிந்து ஜாக்ரன வேதிகே மனு
ADDED : ஆக 30, 2025 01:17 AM

மைசூரு; 'புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக், நடப்பாண்டு மைசூரு தசராவை துவக்கி வைப்பார்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதற்கு ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பானு முஷ்டாக், 2023ல் நடந்த கன்னட சாகித்ய விழாவில் பேசும்போது, 'கன்னட மொழியை புவனேஸ்வரி தாயாக மாற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து விட்டீர்கள்' என்று பேசியிருந்தார். இதை சுட்டிக்காட்டி ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதேவேளையில், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், 'பானு முஷ்டாக்கை அரசு தேர்வு செய்ததை வரவேற்கத்தக்கது' என குறிப்பிட்டிருந்தார். இவரின் பேச்சு, அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மைசூரில் யதுவீர் நேற்று கூறியதாவது:
பானு முஷ்டாக்கை அரசு தேர்வு செய்ததை வரவேற்கத்தக்கது. அதேவேளையில், கன்னட தாய் புவனேஸ்வரி, மஞ்சள், குங்குமம் கொடி குறித்து அவர் பேசியதை, தற்போது தான் கேட்டேன். இது மனதிற்கு வேதனை அளிக்கிறது. இவ்விஷயத்தில் அவர், தன் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அவர் கூறியதை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக நானும் போராடுவேன்.
பானு முஷ்டாக்கின் மதம் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால், சிலையை வணங்கும் நம் மதம் பெரிதாக கருதுகிறேம். சாமுண்டீஸ்வரி தேவியை பக்தியுடன் தரிசனம் செய்ய வேண்டும். எனவே, தசராவுக்கு முன்னதாக, அவரின் கருத்துக்கு விளக் கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், மைசூரு மாவட்ட ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பின் சந்துரு தலைமையில் உறுப்பினர்கள், நேற்று மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் இல்லாததால், துணை கலெக்டர் சிவராஜிடம் மனு வழங்கினர்.
பின், சந்துரு கூறியதாவது: சிலை வழிபாட்டை விமர்சிக்கும் முஸ்லிம்கள் பலர் உள்ளனர். இவர்களில், பானு முஷ்டாக்கும் ஒருவர். நம் கலாசாரத்தையும், நாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார். எனவே, ஹிந்து பண்டிகையை துவக்கி வைக்க இவரை தேர்வு செய்தது தவறு. இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.