ADDED : ஆக 06, 2025 10:37 PM
திருவனந்தபுரம்:புனலூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்ஜினை இணைக்கும் போது தீப்பற்றியது.
மதுரையிலிருந்து காலை 11:35 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி புனலூர் வழியாக மறுநாள் அதிகாலை 2: 10 மணிக்கு குருவாயூருக்கு சென்றடையும் வகையில் தினசரி ரயில் இயக்கப்படுகிறது.
புனலூர் வழியாக செல்லும் ரயில்களில் மலைப்பகுதியை கடப்பதற்காக கூடுதலாக ஒரு இன்ஜின் இணைக்கப்படும். இது பங்கர் இன்ஜின் என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் இந்த ரயில் புனலூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் பங்கர் இன்ஜினை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென புகையும் தீயும் வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரை மணி நேர தாமதத்திற்கு பின் ரயில் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.