புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய டி.எஸ்.பி., கைது
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய டி.எஸ்.பி., கைது
ADDED : ஜன 04, 2025 07:47 AM

துமகூரு: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட மதுகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா கைது செய்யப்பட்டார்.
நில முறைகேடு தொடர்பாக, ஒரு பெண், துமகூரு மாவட்டம், மதுகிரி போலீஸ் நிலையத்தில், புகார் செய்வதற்கு சென்றார்.
அவரிடம் புகார் குறித்து, மதுகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா விசாரித்தார். வழக்கு விசாரணையில், நியாயம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
விசாரணைக்கு அழைக்கும்போது, போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என்றார். இதற்கு அப்பெண்ணும் சம்மதித்தார்.
மறுநாள், விசாரணைக்கு வருமாறு, அப்பெண்ணுக்கு டி.எஸ்.பி., அழைப்பு விடுத்தார். அந்த பெண் டி.எஸ்.பி., அலுவலகம் சென்றார்.
டி.எஸ்.பி., அறைக்குள் அப்பெண் சென்றார். அவரிடம் நைசாக பேசி, போலீஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அந்த பெண்ணை கட்டிப் பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இந்த காட்சியை, கழிப்பறை ஜன்னல் வழியாக ஒரு நபர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையறிந்த அப்பெண், மதுகிரி போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி., மீது பாலியல் வழக்கு புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து டி.ஜி.பி, அலோக் மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பாவை, எஸ்.பி., அசோக் சஸ்பென்ட் செய்தார். நேற்று டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த மாவட்டமான துமகூரில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

