ADDED : மார் 12, 2024 03:13 AM

உத்தர கன்னடா: “கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்கள் இடையே ஒற்றுமையில்லை. இம்முறை பல தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்,” என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடாவில் ஹூப்பள்ளி சாலையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை, நேற்று அமைச்சர் ராமலிங்க ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநில அரசின் வாக்குறுதித் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வாக்குறுதித் திட்டங்களால் வளர்ச்சி தாமதமாகிறதென, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
உத்தர கன்னடா லோக்சபா தொகுதி எம்.பி., அனந்த குமார் ஹெக்டே, அரசியல் அமைப்பு மாற்றம் குறித்து முன்பு கூறியிருந்தார். ஒருமுறை அமைச்சராக இருந்தபோது கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தார்.
மீண்டும் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. தற்போது தேர்தல் வந்துள்ள நிலையில், மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது பற்றி பேசுகிறார். இது ஒன்றும் புதிதல்ல.
'கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் பெறுவோம்' என, பா.ஜ.,வினர் கூறினர். இப்போதும் அதையே கூறி வருகின்றனர். லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
பெறுவது உறுதி. லோக்சபா தேர்தலில் என் மகள் சவுமியா ரெட்டிக்கு சீட் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

