sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., தந்த 3 தொகுதியில் 2ல் தேவகவுடா குடும்பத்தினர் போட்டி!

/

பா.ஜ., தந்த 3 தொகுதியில் 2ல் தேவகவுடா குடும்பத்தினர் போட்டி!

பா.ஜ., தந்த 3 தொகுதியில் 2ல் தேவகவுடா குடும்பத்தினர் போட்டி!

பா.ஜ., தந்த 3 தொகுதியில் 2ல் தேவகவுடா குடும்பத்தினர் போட்டி!

2


UPDATED : மார் 27, 2024 11:08 AM

ADDED : மார் 27, 2024 07:29 AM

Google News

UPDATED : மார் 27, 2024 11:08 AM ADDED : மார் 27, 2024 07:29 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பா.ஜ., கூட்டணியில் மூன்று இடங்களை பெற்ற ம.ஜ.த., சார்பில், இரண்டு தொகுதிகளில், தேவகவுடாவின் குடும்பத்தினரே போட்டியிடுகின்றனர். இதன்படி, மாண்டியாவில் குமாரசாமியும்; ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவும் களம் இறங்குகின்றனர். கோலார் தொகுதி மட்டுமே, கட்சி பிரமுகர் மல்லேஸ் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.

கர்நாடகாவில், லோக்சபா தேர்தலை ஒட்டி, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் ஐந்து தொகுதிகளை கேட்டு வந்த ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை மட்டுமே பா.ஜ., ஒதுக்கீடு செய்தது. இதன்படி, ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, ஹாசன், கோலார் -- தனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புது குழப்பம்


இதற்கிடையில், இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்த தேவகவுடாவின் இரண்டாவது மகனும், ம.ஜ.த., மாநில தலைவருமான குமாரசாமி, நேற்று முன்தினம் பெங்களூரு திரும்பினார். இவருக்காக மாண்டியா மற்றும் ராம்நகர் மாவட்ட ம.ஜ.த.,வினர் காத்திருந்தனர்.

அவர்கள், 'லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் குமாரசாமி போட்டியிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதே வேளையில், குமாரசாமி சென்னபட்டணா தொகுதி எம்.எல். ஏ.,வாக இருப்பதால், அத்தொகுதியை விட்டு செல்லக்கூடாது என, அத்தொகுதி கட்சியினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னபட்டணா தொகுதி ம.ஜ.த.,வினருடன் குமாரசாமி, அவரது மகன் நிகில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, பெங்களூரு ஜெ.பி., நகரில் உள்ள குமாரசாமி வீட்டில் நேற்று மாலை கட்சி முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின், குமாரசாமி அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிடும்படி பா.ஜ., தலைவர்கள், ம.ஜ.த.,வின் பெரும்பாலானோர் கூறியதால், இத்தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

உடல்நிலை காரணமாக, வேட்புமனு தாக்கல் செய்த பின், முழு வீச்சில் என்னால் பிரசாரம் செய்ய இயலாது. எனக்கு பதிலாக கட்சியினர் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்வர்.

ராம்நகர் மாவட்டம், எனக்கு அரசியல் ரீதியாக வாழ்க்கை தந்தது. மைசூரு, மாண்டியா மாவட்டங்கள் எனக்கு அரசியல் ரீதியாக பலத்தை கொடுத்தது. ராம்நகர் மாவட்டத்துக்கு பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.

கடந்த 12 ஆண்டுகளில் என் இதயத்தில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. நாட்டிற்காக நான் உழைக்க வேண்டும் என்று கடவுள் ஆசீர்வதித்துள்ளார்.

மாநில வளர்ச்சிக்காக, முன்னர் காங்கிரசுடன் அமைத்த கூட்டணி தோல்வியில் முடிந்தது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளோம்.

பெங்களூரு ரூரல் தொகுதியில் ம.ஜ.த., - பா.ஜ., தலைவர்கள் ஒன்றாக பிரசாரத்தை நடத்துவோம். ஹாசன் தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை. பிரஜ்வல் ரேவண்ணாவே போட்டியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேவேளையில், 'கோலாரில் மல்லேஸ் பாபு போட்டியிடுவார்' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று அறிவித்தார்.

பா.ஜ., கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில், ஒன்றில் குமாரசாமியும், ஹாசனில் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வலும் போட்டியிடுகின்றனர்.

கோலாரில் மட்டும் கட்சி பிரமுகருக்கு சீட் வழங்கியுள்ளனர். இதனால், ம.ஜ.த.,வினர் அதிருப்தியில் உள்ளனர்.

சுமலதா முடிவு என்ன?


மாண்டியாவில் குமாரசாமி போட்டியிடுவது உறுதியானதால், தற்போதைய சுயேச்சை எம்.பி., சுமலதா, இன்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில், மீண்டும் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

வேட்பாளர் விபரம்


பெயர்: குமாரசாமி, 64,

படிப்பு: பி.எஸ்சி.,

குடும்பம்: மனைவி அனிதா, மகன் நிகில்.

அரசியல் அனுபவம்: 1996ல், கனகபுரா தொகுதியில், முதன் முறையாக எம்.பி.,யானார். 2009 - 2013 வரை பெங்களூரு ரூரல் எம்.பி.,யாக இருந்தார். 2004, 2013ல் ராம்நகர் எம்.எல்.ஏ.,வானார். 2018, 2023 சட்டசபை தேர்தல்களில், சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.

கடந்த 2006 - 2007ல் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் முதல்வரானார். 2018 - 2019ல் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வரானார்.

பெயர்: பிரஜ்வல் ரேவண்ணா, 33.

படிப்பு: பி.இ., மெக்கானிக்கல்

குடும்பம்: தந்தை ரேவண்ணா, தாயார் பவானி, சகோதரர் சூரஜ்.

அரசியல் அனுபவம்: 2019ல் ஹாசனில் ம.ஜ.த., - எம்.பி.,யாக தேர்வானார். நடப்பு லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

பெயர்: மல்லேஸ் பாபு, 50.

படிப்பு: எம்.பி.ஏ.,

குடும்பம்: மனைவி, இரு மகன்கள்

அரசியல் அனுபவம்: 2018, 2023 சட்டசபை தேர்தல்களில், பங்கார்பேட்டை தொகுதியில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

கோலார் மல்லேஸ்பாபு யார்?


கோலார் லோக்சபா தொகுதியில் சீட் பெற, முல்பாகல் எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத், பங்கார்பேட்டை மல்லேஸ்பாபு, தேவனஹள்ளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நிசர்கா நாராயணசாமி ஆகிய மூன்று பேர் முயற்சி மேற்கொண்டனர். இதில், மல்லேஸ்பாபுவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிசாமி -- கோலார் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மங்கம்மா ஆகியோரின் மகன். ஸ்ரீ சாய் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார்.

இவர் 2018 சட்டசபை தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்டு 48,776 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியிடம் 21,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, 2023 சட்டசபை தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதியில், 72,582 ஓட்டுகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியிடம் 4,711 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தேவகவுடா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.






      Dinamalar
      Follow us