யானை எண்ணிக்கை குறைகிறது; கோவில் விழாக்களுக்கு புது சிக்கல்
யானை எண்ணிக்கை குறைகிறது; கோவில் விழாக்களுக்கு புது சிக்கல்
ADDED : மார் 04, 2024 12:49 AM

திருவனந்தபுரம்,: கேரளாவில் வளர்ப்பு யானைகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்த, 10 ஆண்டுகளில் யானை ஊர்வலங்கள் இல்லாமலே கோவில் விழாக்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
கேரளாவில், யானைகளை வளர்ப்பது மிகவும் பிரபலம். குறிப்பாக கோவில்களில் யானைகள் இல்லாமல் எந்த விழாவும் நடக்காது. அதிலும், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடக்கும் திருச்சூர் பூரம் விழா உலக பிரசித்தி பெற்றது.
நடவடிக்கை
ஆனால், தற்போது கோவில்கள் உட்பட மாநிலத்தில் வளர்ப்பு யானைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றன.
இதனால், பல கோவில்களில் நடக்கும் விழாக்களில்கூட, குறைந்த எண்ணிக்கையிலான யானைகளே பங்கேற்கின்றன. ''சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலத்தில், 1,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தன; தற்போது, 400 மட்டுமே உள்ளன,'' என, புகழ்பெற்ற கிடாங்கூர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் மேலாளர் ஷியாம் குமார் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறிஉள்ளதாவது:
எங்கள் கோவிலில் நடக்கும், 10 நாள் விழாவில், 22 யானை அணிவகுப்புகள் நடக்கும். ஆனால், தற்போது போதிய யானைகள் இல்லாததால், இவை பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டு களில் மட்டும் மூன்று கோவில் யானைகள் உயிரிழந்தன. இதனால், யானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளியில் இருந்து வாடகைக்கு எடுக்கலாம் என்றால், ஒரு நாள் வாடகை 30,000 ஆக இருந்தது.
தற்போது 1 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில நேரங்களில் இந்த பணம் கொடுத்தாலும், யானைகள் கிடைப்பதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வளர்ப்பதற்காக யானைகளை அழைத்து வருவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
கோவில் விழாக்களுக்கு யானைகள் பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன.
அதிக சத்தம், அதிக மக்கள் கூடும் இடத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் போன்றவற்றை எதிர்கொள்ளும் பயிற்சி யானைக்கு தேவை. அவ்வாறு இல்லாவிட்டால், யானைக்கு மதம் பிடித்து சிக்கலாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோபோக்கள்
இந்த விஷயத்தில் மாநில அரசு தான் உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என, சில வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே சில கோவில்களில், யானை வடிவிலான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய நிலை தொடர்ந்தால், அடுத்த, 10 ஆண்டுகளில் கோவில்களில் நிஜ யானைகள் இல்லாமல், ரோபோக்கள் மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் என, ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

