'ஆன்லைன் கேமிங்' மசோதா தடை விதிகளை அமல்படுத்த முடிவு
'ஆன்லைன் கேமிங்' மசோதா தடை விதிகளை அமல்படுத்த முடிவு
ADDED : ஆக 23, 2025 12:54 AM

புதுடில்லி: 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின், அது தொடர்பான தடை விதிகளை முதலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெருகி வரும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகும் பலர், தங்கள் சேமிப்பை இழப்பதுடன், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
சமூக பிரச்னை இந்த சூழலில், நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா' நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
விதிகளை மீறி விளம்பரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் ஒப்புதலை அடுத்து, இந்த மசோதா சட்டமாக மாறும் நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை முதலில் தடை செய்யும் விதிகளை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. இதை முடிவுக்கு கொண்டு வரவே ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலை அடுத்து, இந்த மசோதாவை விரைவாக செயல்படுத்தும் பணியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தடை விதிகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.
அழிவு மசோதாவில் உள்ள பிற பிரிவுகளைவிட, தடை தொடர்பான பிரிவை முதலில் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மற்ற பிரிவுகளுக்கு, வரைவு விதிகளை உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பணத்தை வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதே இந்த மசோதாவின் நோக்கம். அதேசமயம், இ - ஸ்போர்ட்ஸ் எனப்படும், மின் விளையாட்டு மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமானால், ஏராளமானோர் வேலையை இழப்பர் என தொழில்துறையினர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நாட்டில் உள்ள பலரின் வாழ்க்கை முடிவுக்கு காரணமாக உள்ள இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதால், வேலை இழப்பவர்களுக்கு, நிச்சயம் வேறு வேலை கிடைக்கும். அதற்காக, சமூகத்தின் அழிவுக்கு காரணமாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.