ADDED : மார் 21, 2024 03:07 AM

ஹாவேரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை, சுறுசுறுப்பாக தொகுதியை சுற்றி வந்து பிரசாரம் செய்கிறார். ஆனால் காங்., வேட்பாளரிடம் இத்தகைய சுறுசுறுப்பை காண முடியவில்லை.
ஹாவேரி லோக்சபா தொகுதிக்கு, இரண்டாம் கட்டத்தில் மே 7ல், தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, ஆனந்தசாமி கட்டதேவரமடாவை, காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. அதே போன்று முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஹாவேரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஒரு சுற்று பிரசாரத்தை பசவராஜ் பொம்மை முடித்துள்ளார்.
கடந்த 18ல் ஹாவேரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கதக்கின், கஜேந்திர கடா, கதக், லட்சுமேஷ்வராவில், பா.ஜ., தொண்டர்கள் மாநாடு நடத்தினார்.
லட்சுமேஷ்வராவில், பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். முக்கியமான தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனக்கு சீட் கொடுத்ததால், அதிருப்தியில் உள்ள தலைவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசாமி கட்டதேவரமடா, ஹாவேரி மாவட்டத்துக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதிகளில் மட்டும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
இன்னும் கதக்கில் கால் வைக்கவில்லை. 'ஹாவேரியில் மட்டும் பிரசாரம் செய்யாமல், கதக்குக்கும் வாருங்கள்' என, கட்சித்தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
.- நமது நிருபர்-

