உங்கள் ஓட்டுகள் சரியானவர்களுக்கு செலுத்துங்கள்: யோகி ஆதித்யநாத் அறிவுரை
உங்கள் ஓட்டுகள் சரியானவர்களுக்கு செலுத்துங்கள்: யோகி ஆதித்யநாத் அறிவுரை
ADDED : மார் 28, 2024 03:17 PM

முசாபர்நகர்: உங்கள் ஓட்டுகள் தவறானவர்கள் கைகளுக்கு சென்றால் அராஜகம் நடைபெறும்; எனவே சரியானவர்களுக்கு ஓட்டுகளை செலுத்துங்கள்' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2013ல் சமாஜ்வாதி ஆட்சியில் முசாபர்நகரில் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உங்கள் ஓட்டுகள் தவறானவர்கள் கைகளுக்கு சென்றபோது முசாபர்நகரில் பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் சரியானவர்கள் கைகளுக்கு உங்கள் ஓட்டுகள் சென்றபோது, (பா.ஜ., ஆட்சியின்போது) முசாபர்நகர் என்றால் 'கன்வர் யாத்திரை' என பெயர் பெற்றது.
அதேபோல், உங்கள் ஓட்டுகள் தவறான கைகளுக்கு சென்றபோது முசாபர்நகர் மட்டுமல்ல, மேற்கு உத்தர பிரதேசம் முழுவதும் அராஜகத்தின் பிடியில் இருந்தது. அப்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொதுமக்கள் இங்கு வருவதற்கே பயந்தனர். சரியானவர்களுக்கு நீங்கள் ஓட்டளித்தபோது முழு அராகஜமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே சரியானவர்களுக்கு ஓட்டுகளை செலுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

