ADDED : பிப் 26, 2024 01:42 AM
சர்வதேச பெண்கள் தினம், அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின், 'மனதின் குரல்'வானொலி நிகழ்ச்சியில், பெண் சக்தி குறித்து நேற்று உரையாற்றினார்.
அதில், பிரதமர் பேசியதாவது:
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டால் உலகம் செழிக்கும் என, மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.
அதை உண்மையாக்கும் வகையில், நம் நாட்டின் பெண் சக்தி அனைத்து துறைகளிலும் புதிய உயரங்களை தொட்டு வருகின்றனர்.
'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்களை பெண்கள் இயக்க முடியும் என, சில ஆண்டுகள் முன் வரை யாரும் நினைக்கவில்லை. அது இன்றைக்கு சாத்தியமாகி உள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் ட்ரோன்களை இயக்கும் பெண்களை காண முடிகிறது.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் பாழ்படும் பூமி மாதாவை, இயற்கை விவசாயம் வாயிலாக பெண்கள் காப்பாற்றி வருகின்றனர். இயற்கை விவசாயத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெண்கள் விரிவுபடுத்தி வருகின்றனர்.
இயற்கை விவசாயத்திற்காக ட்ரோன்களை இயக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுனிதா, இயற்கை விவசாயம் செய்யும் மஹாராஷ்டிராவின் கல்யாணி பிரபுல்லா பாட்டீல் ஆகியோரிடம் உரையாடியதன் வாயிலாக பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.
எண்ணற்ற துறைகளில் பெண் சக்தி பெறும் வெற்றி ஊக்கம் அளிக்கிறது. அவர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
மார்ச் 3ம் தேதி, உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளில், 'டிஜிட்டல்' கண்டுபிடிப்புகள் முதன்மையான இடத்தை பெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கிறது.
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. முதல் முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் முதல் முறையாக செலுத்தும் ஓட்டு, இந்த நாட்டுக்கானதாக இருக்க வேண்டும்.
இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிப்பதாக இருக்கும். இளைஞர்கள் அரசியல் நடவடிக்கைகளில் மட்டும் பங்கேற்காமல், தேர்தல் காலங்களில் நடக்கும் விவாதங்கள் குறித்த விஷயத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

