ADDED : மார் 02, 2024 10:19 PM
கர்நாடகாவில், கோடை வெப்பத்தின் தாக்கத்தைப் போன்று, லோக்சபா தேர்தல் களத்தின் சூடும் அதிகரிக்கிறது. அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறக்கின்றனர். சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள், தொகுதி மக்களிடம் நற்பெயரை சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்.
கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும், பா.ஜ., கண் வைத்துள்ளது. தற்போது 25 தொகுதிகள் பா.ஜ., வசம் உள்ளது. ம.ஜ.த.,வும், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளது. மாண்டியா எம்.பி., சுமலதா அம்பரிஷும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளார்.
இந்த கணக்குபடி பார்த்தால், 27 தொகுதிகளும் இதே கட்சியிடம் உள்ளன. காங்கிரசிடம் உள்ள பெங்களூரு ரூரல் தொகுதியையும் தட்டிப் பறிக்க, பா.ஜ., முயற்சிக்கிறது.
எனவே டில்லியிலும், கர்நாடகாவிலும் தொடர் கூட்டங்களை பா.ஜ., நடத்துகிறது. கடந்த வாரம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பெங்களூரின் பா.ஜ., அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான், கலபுரகியில் கூட்டம் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
வரும் நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில பொறுப்பாளர் அருண்சிங், தேசிய தலைவர் நட்டா ஆகியோரும் கர்நாடகாவுக்கு வருகை தருவர்.
பிரசார திட்டங்கள் வகுப்பர். பிரதமர் நரேந்திர மோடியை, அதிகமாக பிரசாரத்துக்கு பயன்படுத்த பா.ஜ., திட்டமிட்டுஉள்ளது.
கட்சிக்கு செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதிகளில், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்து, பிரதமரை உரையாற்ற வைப்பதன் மூலம், கட்சிக்கு ஆதரவான அலையை எழுப்ப, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.
மற்றொரு பக்கம், மாநில தலைவர்களும் தொகுதி, தொகுதியாக சுற்றி வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உட்பட, பல தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான பின், அனைத்து கட்சிகளின் சுறுசுறுப்பு மேலும் அதிகரிக்கும்.
அரசியல் தலைவர்களின் பொதுக் கூட்டம், ஊர்வலம், பிரசாரம் என, கர்நாடகா களை கட்டும். மொத்தத்தில் 28 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைக்க தலைவர்கள் காரியத்தில் கண்ணாக உள்ளனர்
.- நமது நிருபர் -

