மஹா.,வில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
மஹா.,வில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
ADDED : அக் 28, 2025 07:03 AM

மும்பை: ''மஹாராஷ்டிராவில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; சொந்த பலத்தில் கட்சி இயங்குகிறது,'' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே, 55,000 சதுரடி பரப்பளவில், பா.ஜ.,வுக்கு புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
நுாலகம், கூட்டரங்கு, 400 பேர் அமரும் வகையில் அரங்கம் என பல வசதிகள் உள்ளன.
புதிய தலைமை அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளின் அரசியல், இந்நாட்டில் இனி செயல்படாது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
செயல்திறனை கொண்ட அரசியலே இனி நாட்டை முன்னோக்கி அழைத்து செல்லும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த உதாரணம்.
டீ விற்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், அர்ப்பணிப்பு, தியாகம், விடாமுயற்சியில் நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; சொந்த பலத்தில் கட்சி வேகமாக இயங்க வருகிறது. இங்கு நான்காவது இடத்தில் பா.ஜ., தற்போது 'நம்பர் - 1' கட்சியாக உருவெடுத்துள்ளது. இங்கு இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற வேண்டும்.
இதற்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். பைனாக்குலரில் பார்த்தால் கூட எதிர்க்கட்சிகள் நம் கண்ணில் படக்கூடாது. அவர்களை தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். தன் சொந்த செயல்பாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாத ஒரு கட்சியால், ஒருபோதும் தேசத்தின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. இது, வாரிசு அரசியலை நம்பும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தி.
'ஆப்பரேஷன் சிந்துார், ஆப்பரேஷன் மஹாதேவ்' மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கப்பட்டது.
எல்லையில் நம்மிடம் யாரும் வாலாட்ட முடியாது என்பதை எதிரிகளுக்கு நிரூபித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

