விவசாயிகளுக்கு அரசு நிலம் அரசியல் தேடும் பா.ஜ., - காங்.,
விவசாயிகளுக்கு அரசு நிலம் அரசியல் தேடும் பா.ஜ., - காங்.,
ADDED : மார் 21, 2024 03:44 AM

விவசாயிகள் ஆக்கிரமித்த, 25 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கே, ஒப்பந்த அடிப்படையில் விட்டுக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசியல் லாபம் பெற, பா.ஜ., காங்கிரஸ் போட்டி போடுகின்றன.
சிக்கமகளூரு மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் விவசாயிகள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து, ஏலக்காய், காப்பி, மிளகு, ரப்பர், டீ பயிரிடுகின்றனர். பல ஆண்டுகளாக பயிரிடுவதால், இந்த நிலத்தை தங்களுக்கு உரிமையாக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு முன்பு பா.ஜ., அரசு இருந்தபோது, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்தது. அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் அசோக், இதில் ஆர்வம் காண்பித்தார்.
விவசாயிகள் ஆக்கிரமித்து பயிரிட்டுள்ள நிலத்தில், 25 ஏக்கர் வரையிலான நிலத்தை 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், அவர்களுக்கே விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அதற்குள் சட்டசபை தேர்தல் நடந்ததால், விவசாயிகளுக்கு நிலம் தருவது நிறுத்தப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் குழுவினர் முதல்வரை சந்தித்து, பிரச்னைகளை விவரித்தனர். எனவே ஆக்கிரமிப்பு நிலத்தில், 25 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வழங்க, முதல்வர் செய்துள்ளார். ஆன்லைனில் விவசாயிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லோக்சபா தேர்தல் வருவதால், இந்த விஷயத்தை அரசியல் லாபமாக்கி, ஓட்டுகளாக மாற்ற காங்கிரஸ், பா.ஜ., துடியாய் துடிக்கின்றன. விவசாயிகள் மீது தங்களுக்கே அக்கறை உள்ளது என, காண்பிக்க முயற்சிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் ரவி கூறியதாவது:
அரசு நிலத்தை ஆக்கிரமித்து, பயிரிடும் விவசாயிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்க, பா.ஜ., அரசிலேயே அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தது. அறிவிப்பு மட்டுமே வெளியிட வேண்டியிருந்தது. அதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால், அறிவிக்க முடியவில்லை. அந்த அறிவிப்பை இன்றைய அரசு வெளியிட்டுள்ளது.
காங்கிரசார் இந்த விஷயத்தில், அரசியல் லாபம் பெற முடியாது. விவசாயிகளுக்கு அனைத்தும் தெரியும். புதிதாக நிலத்தை விவசாயிகளுக்கு, விட்டு தரவில்லை. அவர்கள் 40 - 50 ஆண்டுகளாக, சிலர் 100 ஆண்டுகளாக காபி பயிரிடுகின்றனர்.
ஒப்பந்தத்துக்கு அளிப்பதால், அரசுக்கு பல லாபங்கள் உள்ளன. எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெரியும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். காபி பயிரிட்டதுடன், சுற்றுச்சூழலை விவசாயிகள் பாதுகாக்கின்றனர்.
இதை மனதில் கொண்டு, இவர்களுக்கே நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்க, எங்கள் அரசு முடிவு செய்தது. இதற்கான பெருமை பசவராஜ் பொம்மை, அசோக்கை சாரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., மூத்த தலைவர் மோட்டம்மா கூறியதாவது:
பா.ஜ., நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. விவசாயிகளுக்கு நிலம் விட்டுத்தரும் திட்டத்தை, அப்போது ஏன் செயல்படுத்தவில்லை. பா.ஜ.,வினருக்கு மனம் இல்லை. எங்கள் அரசு வந்த பின், விவசாயிகள் குழுவுடன் முதல்வரை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் ஆக்கிரமித்த நிலத்தை, ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவது குறித்து, 2017 - 18ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே, அன்றைய முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதற்கு சட்டசபை, சட்டமேலவையில் அனுமதி கிடைத்திருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-

