பீஹார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அட்டை உள்ளது; ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு
பீஹார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அட்டை உள்ளது; ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு
ADDED : ஆக 11, 2025 02:59 AM

பாட்னா : பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பதாக ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.
இதில், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரு வேறு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள், உயிரிழந்தவர்கள் என, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது தன் பெயர் நீக்கப்பட்டதாக முன்னாள் துணை முதல்வரும், ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், இரண்டு வாக்காளர் அட்டையை எப்படி பெற்றார் என்பது குறித்து விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில், தேஜஸ்வி யாதவ் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ள தாவது:
பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் விஜய்சின்ஹா, லக்கிசராய் மற்றும் பன்கிபூர் என, இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார்.
இது முறைகேடு ஆகாதா? வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக, இரண்டு விண்ணப்பங்களை அவர் தனித்தனியாக இரு வேறு தொகுதிகளில் இருந்து கையெழுத்திட்டு கொடுத் திருக்கிறார்.
அந்த விண்ணப்பங்களில் அவர் கையெழுத்திடவில்லை என்றால், தேர்தல் ஆணையமே போலியாக, அவரது கையெழுத்தை போட்டதா?
இந்த முறைகேட்டுக்காக அவருக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்புமா? இல்லை எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் கமிஷனின் விதிகள் பொருந்துமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.