12 ஆண்டுக்கு பின் பெங்களூரில் அதிகரித்த வெப்பம்; 37.3 டிகிரி செல்ஷியஸ்!; அடுத்த 3 மாதங்கள் அனல் பறக்கும் என எச்சரிக்கை
12 ஆண்டுக்கு பின் பெங்களூரில் அதிகரித்த வெப்பம்; 37.3 டிகிரி செல்ஷியஸ்!; அடுத்த 3 மாதங்கள் அனல் பறக்கும் என எச்சரிக்கை
ADDED : ஏப் 04, 2024 04:27 AM

பெங்களூரு : கர்நாடகாவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் 12 ஆண்டுகளுக்கு பின், 37.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. 'அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல் காற்று வீசும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை காலத்தில், சிம்லா, காஷ்மீர் போன்ற வட மாநிலங்களுக்கு செல்ல முடியாத தென் மாநிலத்தவர்கள், 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் பெங்களூருக்கு தான் வருகை தருவர்.
ஆனால், நகரமயமாக்கலால் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவு, பெங்களூரிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வானிலை மாற்றத்தால், பெங்களூரு நகரில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 37.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 37.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இதுவே அதிகபட்ச வெப்பமாக இருந்தது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
பெங்களூரில் மார்ச் மாதத்தில் வெப்ப நிலை வாரத்திற்கு வாரம் அதிகரித்து கொண்டே இருந்தது. அதை விட, ஏப்ரல் மாதத்தில் அதிக வெயில் இருக்கும். ஏப்ரல், மே, ஜூன் வரை வெப்ப காற்று வீசுவது தொடரும்.
அதுமட்டுமின்றி, அடுத்த மூன்று நாட்களுக்கு 2 - 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன்பின், மெல்ல மெல்ல குறையும்.
நாளை வரை வட மாவட்டங்களான பாகல்கோட், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி, கொப்பால், கதக் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். அதை தொடர்ந்து மாநிலம் முழுதும் வறண்ட வானிலை ஏற்படும். நேற்று முன்தினம் உள் கர்நாடகாவில் வெப்ப காற்று வீசியது. பெங்களூரில் 37.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. 2012ம் ஆண்டுக்கு பின், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூரில் சுட்டெரிக்கும் வெயிலை மக்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

