ஆதார் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு அனுமதி! : பீஹார் சிறப்பு திருத்த பணி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஆதார் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு அனுமதி! : பீஹார் சிறப்பு திருத்த பணி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
UPDATED : ஆக 23, 2025 01:08 AM
ADDED : ஆக 23, 2025 01:02 AM
'பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின், 1.60 லட்சம் முகவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?' என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், நீக்கப்பட்ட மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இம்மாநில சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஒருமாதமாக நடந்தது. கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
எதிர்ப்பு அதில், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்தோர் என, 65 லட்சம் பெயர்களை நீக்கியது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமூக அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை உரிய காரணங்களுடன் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீக்கப்பட்ட பெயர்களை மாவட்ட வாரியாக இணையதளத்திலும், அந்தந்த பஞ்சாயத்து அலுவலக நோட்டீஸ் போர்டுகளிலும் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பீஹாரில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகள் சார்பில், 1.60 லட்சம் முகவர்கள் இருந்தும், வாக்காளர் பட்டியல் பெயர் நீக்க விவகாரத்தில் இரண்டே ஆட்சேபனைகள் மட்டும் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
'ஆன்லைன்' அல்லது நேரிலோ வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க பொது மக்களுக்கு பூத் முகவர்கள் கண்டிப்பாக உதவ வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது பூத் முகவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்கள் மீண்டும் பெயர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்ட, 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஆதார் அடையாள அட்டையையோ இணைத்து விண்ணப்பிக்கலாம்.
ரசீது வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கும்படி நேரில் விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு உரிய ரசீதுகளை வழங்குவதற்கு பூத் முகவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெயர் சேர்க்கும் நடவடிக்கை வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும்படி தேர்தல் கமிஷன் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக 12 அரசியல் கட்சிகளும் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்., 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-- டில்லி சிறப்பு நிருபர் -