காங்., எம்எல்ஏ மீது பிரபல மலையாள நடிகைகள் பாலியல் புகார்
காங்., எம்எல்ஏ மீது பிரபல மலையாள நடிகைகள் பாலியல் புகார்
ADDED : ஆக 21, 2025 02:08 PM

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் மீது பிரபல மலையாள நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் இளைஞரணி மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
மலையாள நடிகையும், முன்னாள் பத்திரிக்கையாளருமான ரினி அன் ஜார்ஜ் என்பவர், பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தனக்கு ஆபாசமாகவும், எல்லை மீறியும் மெசேஜ் செய்ததாக பரபரப்பு குற்றம்சாட்டினார். மேலும், அந்த அரசியல் பிரமுகர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும், இது தொடர்பாக அவரது கட்சியின் தலைமைக்கு சொல்லி விடுவேன் என்று மிரட்டிய போதும், அலட்சியமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும், அந்த அரசியல் பிரமுகர் சேர்ந்த கட்சியின் பிரபல தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களும் இதேபோன்ற தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'சொந்த குடும்பப் பெண்களை பாதுகாக்கத் தவறிய இந்த அரசியல்வாதிகள், பிற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்?, சமூக வலைதளங்களில் இதேபோன்ற தொல்லைகளை பல பெண்கள் எதிர்கொண்டதை நான் பார்த்தேன். அவர்கள் இதுபற்றி பேசாத நிலையில், அவர்களுக்காக சேர்த்தும் நான் குரல் கொடுத்துள்ளேன்,' என்று ரினி கூறியுள்ளார்.
ஆனால், அந்த அரசியல் பிரமுகர் யார்? எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்து எந்த தகவலை வெளியும் அவர் வெளியிடவில்லை. இதைத்தொடர்ந்து, மற்றொரு நடிகை ஹனி பாஸ்கரன், காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பல பெண்கள் புகார் அளித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனிடையே, பாலக்காட்டில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூடத்தில் அலுவலகத்தை நோக்கி பாஜ பேரணி நடத்தியது. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீஷன், இதுவரையில் கட்சி ஒரே ஒரு புகாரை மட்டுமே பெற்றுள்ளதாகவும், யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனிடையே, அவர் இளைஞரணி மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே, சினிமா நடிகைகளுக்கு திரையுலகில் பாலியல் புகார்கள் இருப்பதாக வெளியான புகார்கள் கேரளாவை உலுக்கிய நிலையில், தற்போது அரசியல் பிரமுகரும் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.