ADDED : மார் 21, 2024 03:19 AM
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதல்வர் சிவகுமார் இடையிலான கவுர பிரச்னையாக மாறியுள்ளது. இங்கு 40 ஆண்டுகளாக, இதே நிலை நீடிக்கிறது.
பெங்களூரு ரூரல் தொகுதியில், 40 ஆண்டுகளாக ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தேவகவுடா, சிவகுமார் குடும்பங்களுக்கு இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. இம்முறை தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரு ரூரல் தொகுதியில் களமிறங்கியதன் மூலம், அரசியலில் நுழைந்துள்ளார்.
இம்முறை பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளதால், பெங்களூரு ரூரல் தொகுதியில், மஞ்சுநாத் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், காங்கிரஸ் வேட்பாளராக நான்காவது முறையாக களமிறங்கியுள்ளார். இவரை தோற்கடிக்க பா.ஜ., - ம.ஜ.த., வியூகம் வகுத்துள்ளன.
கடந்த 1985ல் தேவகவுடா, ராம்நகரின், சாத்தனுாரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். அன்று முதல் இரண்டு குடும்பங்களுக்கு இடையே, அரசியல் ரீதியான மோதல் துவங்கியது. முதல் தேர்தலிலேயே காங்., வேட்பாளர் சிவகுமாரை, தேவகவுடா தோற்கடித்தார். 1994ல் ராம்நகர் சட்டசபை தொகுதியில் களமிறங்கி, முதல்வர் பதவியில் அமர்ந்தார்.
அதன் பின், 1999ல் சாத்தனுார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, சிவகுமாரிடம் தோற்றார். 2004ல் ராம்நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று, குமாரசாமி முதல்வரானார். 2008ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
கடந்த 1996ல் கனகபுரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, முதன் முறையாக எம்.பி.,யானார். 2002ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேவகவுடா, சிவகுமாரை தோற்கடித்தார்.
பிறகு 2009ல் பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.யான குமாரசாமி, 2013 சட்டசபை இடைத்தேர்தலில் களமிறங்கும் நோக்கில், எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அவரால் காலியான லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவகுமாரின் தம்பி சுரேஷ் களமிறங்கிய வெற்றி பெற்றார். அன்றிலிருந்து சுரேஷ் அரசியல் பயணம் துவங்கியது.
கடந்த 40 ஆண்டுகள் அரசியலில், தேவகவுடா, சிவகுமார் குடும்பங்களுக்கு இடையே ஆடு புலி ஆட்டம் நடந்து வருகிறது. இப்போது சுரேஷுக்கு எதிராக, தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் களத்தில் உள்ளார். சுரேஷை தோற்கடிக்க கூட்டணி கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன.
அதே போன்று மஞ்சுநாத்தை தோற்கடித்து, தேவகவுடா குடும்பத்துக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என, காங்., முயற்சிக்கிறது- நமது நிருபர் -.

