கடையில் 'ஹனுமன் சாலிசா' கேட்ட உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
கடையில் 'ஹனுமன் சாலிசா' கேட்ட உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : மார் 19, 2024 06:34 AM

நகரத்பேட்: பெங்களூரில் தன் கடையில் 'ஹனுமன் சாலிசா' பாட்டு கேட்டுக் கொண்டிருந்த உரிமையாளரை, 'நாங்கள் பிரார்த்தனை செய்யும்போது எதற்காக இந்த பாட்டு போட்டாய்?' என கேட்டு, உரிமையாளர்களை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்; இருவர் தலைமறைவாகினர்.
பெங்களூரு கே.ஆர்., மார்க்கெட் பகுதியில் உள்ள நகரத்பேட்டில், மொபைல் போன் கடை நடத்தி வருபவர் முகேஷ். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இங்கு கடையை திறந்துள்ளார்.
தினமும் கடையில் பக்தி பாடல்கள் கேட்பது இவரது வாடிக்கை. நேற்று முன்தினம் வழக்கம் போல் மாலையில் ஹனுமன் சாலிசா பக்தி பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட இளைஞர்கள், 'நாங்கள் பிரார்த்தனையில் ஈடுபடும்போது, எதற்காக ஹனுமன் சாலிசா பாடல் போடுகிறாய்?' என கேட்டுள்ளனர்.
அப்போது முகேசுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கடையில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்ட முகேசை, இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். இவை அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக ஹலசூரு கேட் போலீசில், சுலைமான், ஷானவாஸ், ரோஹித், டானிஷ், தருண் ஆகியோர் மீது முகேஷ் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சுலைமான், ஷானவாஸ், ரோகித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டானிஷ், தருணை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையறிந்த பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, நேற்று முகேசை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், அவர் கூறியதாவது:
வழக்கம் போல் முகேஷ் தன் கடையில் மாலை நேரத்தில் பக்தி பாடல்கள் கேட்பது வழக்கம். நேற்று முன்தினம் ஹனுமன் சாலிசா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள், முகேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி உள்ளனர். அவருக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்தாலே, உங்களுக்கு தெரியும். இதையடுத்து, அவரும், அருகில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர். முதலில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை.
பா.ஜ., - எம்.பி., மோகன், நான் மற்றும் உள்ளூர் பா.ஜ.,வினர் கூறிய பின்னரே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். மூன்று பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடை உரிமையாளரை சாலையில் தள்ளி தாக்கிய இளைஞர்கள். இடம்: நகரத்பேட், பெங்களூரு.

