2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்: மே.வங்கத்தில் அதிர்ச்சி
2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்: மே.வங்கத்தில் அதிர்ச்சி
ADDED : நவ 27, 2025 06:21 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்), 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு அவர் கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இதுவரை 6 கோடி படிவங்கள் விண்ணப்படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, முந்தைய எஸ்ஐஆர் பணியுடன், தற்போதைய பட்டியல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் ஒத்துப்போகவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர்ந்து நடப்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

