வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; அதிகாரிகள் தயாராக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; அதிகாரிகள் தயாராக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தல்
ADDED : நவ 27, 2025 06:29 PM

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையானது மேலும் தீவிரம் அடையும் சூழலில் மழை அதிகம் பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். டிட்வா புயல் காரணமாக, கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.
கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வருவாய் துறை செயலாளர் அமுதா, போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
* மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்க முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனே அனுப்பி மீட்பு, நிவாரண மையங்களை தயார் செய்ய வேண்டும்.
* அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
* பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
* அமைச்சர்கள், அதிகாரிகள் களத்திற்கு செல்ல வேண்டும்.
* பேரிடர் மேலாண்மைக்கான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

