ADDED : மார் 28, 2024 05:19 AM
கோவிந்தபுரா : நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுமார், 36, சூரஜ்குமார், 34, ஜெய்சிங், 34. நண்பர்களான இவர்கள் ஓராண்டுக்கு முன்பு பிழைப்பு தேடி, பெங்களூருக்கு வந்தனர். மஹாதேவகுப்தா என்பவரிடம், பெயின்டிங் பணிக்கு சேர்ந்தனர். மூன்று தொழிலாளர்களையும், நாகவாராவில் வாடகை வீட்டில் அவர் தங்க வைத்தார்.
பணி நிமித்தமாக இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. ஹோலி பண்டிகைக்காக நேற்று முன் தினம் மாலை, பணிக்கு விடுமுறை இருந்தது. மூவரும் சேர்ந்து பண்டிகை கொண்டாடினர். மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் ஏதோ காரணத்தால், சண்டை நடந்தது. பொறுமையிழந்த சூரஜ்குமாரும், ஜெய்சிங்கும் சேர்ந்து இரும்பு கம்பியால் ராஜகுமாரின் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்தனர்.
அதன்பின் அறையை பூட்டிவிட்டு, இருவரும் வெளியே சென்று சுற்றிவிட்டு வந்தனர். ராஜகுமார் உடலை வெளியே கொண்டு சென்று, எங்காவது வீச திட்டமிட்டனர். சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், பயந்து மவுனமாக இருந்தனர்.
இரவு 11:00 மணியளவில், சூரஜ்குமார் கோவிந்தபுரா போலீஸ் நிலையத்துக்கு சென்று, பொய் கதையை கூறி நாடகமாடினார். இவரது பேச்சும், செயலும் சந்தேகமளித்ததால், போலீசார் அவரை விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். அதன்பின் உடலை மீட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, சூரஜ்குமாரையும், ஜெய்சிங்கையும் கைது செய்தனர்.

