சுவாதி விவகாரம்: நியாயமான விசாரணை கேட்கிறார் கெஜ்ரி
சுவாதி விவகாரம்: நியாயமான விசாரணை கேட்கிறார் கெஜ்ரி
ADDED : மே 23, 2024 01:55 AM

புதுடில்லி, ''ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை,'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். அவரை சந்திப்பதற்காக, டில்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு அக்கட்சி எம்.பி., சுவாதி மாலிவால் கடந்த 13ம் தேதி சென்றார்.
அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கும், சுவாதி மாலிவாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முடிவில், சுவாதியை அவர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. பிபவ் குமார் கைது செய்து செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவால் முதன்முறையாக நேற்று மவுனம் கலைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இரண்டையும் ஆழமாக ஆராய்ந்து, நேர்மையான முறையில் போலீசார் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்,'' என்றார்.
சம்பவம் நடந்தபோது, அவர் அங்கு இருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், ''வீட்டில் தான் இருந்தேன்; சம்பவம் நடந்த இடத்தில் இல்லை,'' என்றார்.

