மாநில காங்., தலைவர் சுதாகரன் பா.ஜ.,வுக்கு செல்ல திட்டம்: கேரளா மா.கம்யூ., குற்றச்சாட்டு
மாநில காங்., தலைவர் சுதாகரன் பா.ஜ.,வுக்கு செல்ல திட்டம்: கேரளா மா.கம்யூ., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2024 01:19 AM
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பா.ஜ.,வுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்று, மா.கம்யூ.,வை சேர்ந்த இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முன்னாள் அமைச்சரும், மா.கம்யூ., மத்தியக் கமிட்டி உறுப்பினருமான இ.பி. ஜெயராஜன் பா.ஜ.,வுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் சமீபத்தில் கூறியிருந்தார்.
மா.கம்யூ., கேரள மாநில செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஜெயராஜன் கருதியிருந்ததாகவும், பதவி கிடைக்காதால் அதிருப்தியடைந்து பா.ஜ.,வுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் சுதாகரன் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தான் பா.ஜ.,வில் சேர திட்டமிட்டுள்ளார் என்று ஜெயராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: எனக்கு பா.ஜ.,வில் சேர எந்த அவசியமும் இல்லை.
நான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் போராடித் தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். சுதாகரன் தான் பா.ஜ.,வில் சேர திட்டமிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ., செயலாளர் எச்.ராஜா அழைத்ததின் பேரில் சென்னைக்கு சென்று அவரை சந்தித்து பேசியதாக சுதாகரன் ஏற்கனவே கூறியுள்ளார். கண்ணுாரில் உள்ள சில ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் ஏற்பாட்டின் பேரில் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே எந்த நேரத்திலும் சுதாகரன் பா.ஜ.,வில் சேர தயாராக உள்ளார். நான் சேரப்போவதாக கூறுவதை கேரள மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

