ADDED : மார் 28, 2024 01:38 AM
இடாநகர், அருணாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு ஓட்டை பதிவு செய்ய கரடுமுரடான மலைப் பகுதியில் 39 கி.மீ., பயணிக்கும் நிலை அங்குள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், நம் அண்டை நாடான சீன எல்லையை ஒட்டிய அஞ்சாவ் மாவட்டத்தில் மாலோகம் கிராமம் உள்ளது.
ஹயுலியாங் சட்டசபை தொகுதி மற்றும் அருணாச்சல பிரதேச கிழக்கு லோக்சபா தொகுதியை உள்ளடக்கிய இந்த கிராமத்தில் அடுத்த மாதம் 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டுச் சாவடியில், சோகேலா தயாங், 44, என்ற பெண்மணி மட்டும் ஓட்டளிக்க தகுதியானவராக உள்ளார்.
மாலோகம் கிராமத்தில் வசிக்கும் சில குடும்பங்கள், அருகில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு தங்கள் பெயர்களை மாற்றிய நிலையில், தயாங் மட்டும் இன்னும் மாற்றாமல் அங்கேயே ஓட்டளித்து வருகிறார்.
கடந்த 2014ல், தயாங்கும் அவரது கணவரும் இங்கு ஓட்டளித்தனர். அவர் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றதை அடுத்து, இந்த ஆண்டு தயாங் மட்டுமே அங்கு ஓட்டளிக்கிறார்.
இவரது ஒரு ஓட்டை பதிவு செய்ய, கரடுமுரடான மலைப்பாதையில் ஓட்டளிக்கும் இயந்திரம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களுடன் 39 கி.மீ., துாரம் நடந்தே பயணிக்கும் நிலை, அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கப்படும் 2,226 ஓட்டுச்சாவடிகளில், 228 ஓட்டுச்சாவடிகளுக்கு நடந்து தான் செல்ல முடியும்.
இதில் 61 மையங்களுக்கு இரண்டு நாட்கள் மலையேற்றம் தேவை. ஏழு ஓட்டுச் சாவடிகளுக்கு கரடுமுரடான மலைப்பாதை வழியாக மூன்று நாள் நடந்தே பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.

