இந்தியாவில் விற்கப்படும் நெஸ்ட்லே பொருட்களில் சர்க்கரை அதிகம்
இந்தியாவில் விற்கப்படும் நெஸ்ட்லே பொருட்களில் சர்க்கரை அதிகம்
ADDED : ஏப் 19, 2024 12:53 AM

புதுடில்லி, இந்தியாவில் விற்கப்படும், 'நெஸ்ட்லே' நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பால் பொருட்களில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக வைத்து செயல்படும், நெஸ்ட்லே நிறுவனம், உலகின் முன்னணி நுகர்வு பொருட்கள் நிறுவனமாக உள்ளது.
பால் பொருட்கள்
இந்த நிறுவனம், 'செரலாக்' உள்ளிட்ட பெயர்களில், குழந்தைகளுக்கான பால் பொருட்களை விற்பனை செய்கிறது.
இந்தியாவில் இவ்வாறு விற்கப்படும் இந்த நிறுவனத்தின் பால் பொருட்களில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின், செரலாக் வகை பொருட்கள் விற்பனை, இந்தியாவில், 2022ல், 20,000 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில் விற்கும், 15 வகையான குழந்தைகளுக்கான பால் பொருட்களிலும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குழந்தைகளுக்கான பால் பொருட்களில், 3 கிராம் வரை சர்க்கரை அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், சர்க்கரை இல்லாமல் இந்தப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
ரத்த அழுத்தம்
அதே நேரத்தில் ஆசியா, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், சர்க்கரை அளவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. தாய்லாந்து, எத்தியோப்பியாவில், 6 கிராம் அளவுக்கு சர்க்கரை இருப்பது தெரியவந்துள்ளது.
தன் பால் பொருட்களில், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சர்க்கரை அளவு குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை.
'அதிகளவு சர்க்கரை சேர்ப்பது என்பது, குழந்தைகள் அந்த சுவைக்கு அடிமையாகிவிடுவர்.
'இதனால், அந்தப் பொருட்கள் விரும்பி சாப்பிடுவர். ஆனால், எதிர்காலத்தில், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 'குழந்தை உணவுப் பொருட்களை அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்து வருகிறோம்.
'கடந்த, சில ஆண்டு களில், சர்க்கரையின் அளவை, 30 சதவீதம் குறைத்துள்ளோம்' என, நெஸ்ட்லே இந்தியா வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

