சித்தராமையா முதல்வர் பதவிக்கு ஆபத்து என்கிறார் இக்பால் அன்சாரி
சித்தராமையா முதல்வர் பதவிக்கு ஆபத்து என்கிறார் இக்பால் அன்சாரி
ADDED : ஏப் 04, 2024 10:43 PM

கொப்பால், -''லோக்சபா தேர்தலில், அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர முடியும்,'' என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி கருத்து தெரிவித்தார்.
கொப்பால், கங்காவதியில், நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் எம்.பி., ஸ்ரீராமுலுவின் இல்லம், ஒரு மடமாக மாறியுள்ளது. இந்த மடத்துக்கு அனைத்து கட்சியினரும் வருவர். காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகர ஹிட்னால், அங்கு சென்றால் எதுவும் நடந்து விடாது.
தேர்தலை சந்திப்பது, எனக்கு கை வந்த கலை. முதல்வர் சித்தராமையா கடந்த வாரம், என்னை பெங்களூருக்கு வரவழைத்து, எனக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதாக உறுதி அளித்தார். நான் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவன். அவர் கூறியபடி காங்., வேட்பாளருக்கு ஆதரவாக, நானும் என் ஆதரவாளர்களும் பணியாற்றுவோம்.
ஸ்ரீநாத் உட்பட காங்கிரசின் பல தலைவர்கள், பல்லாரி ரெட்டியிடம் பணம் பெற்றுக்கொண்டு, சட்டசபை தேர்தலில் அவரை ஆதரித்தனர். நான் நேர்மையானவன்.
ஏழை மக்களின் கஷ்டம், சுகம் எனக்கு தெரியும். ராஜசேகர ஹிட்னால் வெற்றி பெற்றால், சித்தராமையா முதல்வர் பதவியில் நீடிப்பார்.
இம்முறை அதிக தொகுதிகளை கைப்பற்ற, காங்., மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடர், என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டார். ஆனால் நான் தரவில்லை. மற்ற தலைவர்களும் கூட, பா.ஜ.,வினரை சந்திக்க செல்லும் போது, என் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
ஜனார்த்தன ரெட்டியின் ஆட்டம், பல்லாரியில் நடக்கலாம்; கங்காவதியில் நடக்காது. வழக்குகளில் இருந்து விடுபட்டு, அமித் ஷா மூலமாக பா.ஜ.,வில் இணைந்துஉள்ளார்.
கங்காவதி மக்களை கனவுலகில் மிதக்க விட்டு விட்டு, இப்போது ஊரை விட்டு செல்கிறார். அவரை வெற்றி பெற வைத்த தவறுக்காக, மக்கள் பரிதவிக்கின்றனர்.
இதுவரை கிராமங்களில் ரெட்டி, எந்த பணிகளையும் செய்யவில்லை. எப்போதாவது வந்து செல்வதே, அவரது சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.

