'குடும்பம் என்றால் பிரச்னை சகஜம் அமர்ந்து பேசினாலே சரியாகுமே'
'குடும்பம் என்றால் பிரச்னை சகஜம் அமர்ந்து பேசினாலே சரியாகுமே'
ADDED : மார் 31, 2024 04:55 AM

பாகல்கோட், : ''குடும்பம் என்றால் பிரச்னை வர தான் செய்யும். அமர்ந்து பேசினால் எல்லாம் சரியாகும்,'' என, பாகல்கோட் காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகல்கோட் ஹுன்குந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். இவரது மனைவி வீணா காசப்பனவர்.
அதிருப்தி
பாகல்கோட் மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர். கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தொகுதியில் வலம் வந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில், அமைச்சர் சிவானந்தா பாட்டீல் மகள் சம்யுக்தாவிற்கு சீட் கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் விஜயானந்த், வீணாவை முதல்வர் சித்தராமையா சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் அது நடக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிடும் முடிவில் வீணா உள்ளார்.
இதுகுறித்து சம்யுக்தா நேற்று அளித்த பேட்டி:
பாகல்கோட் வேட்பாளராக, என்னை கட்சி மேலிடம் அறிவித்ததில் இருந்து, வீணாவை சந்தித்து பேசவில்லை. இன்னும் இரண்டு நாட்களில், அவரை சந்திப்பேன். அவரிடம் அமர்ந்து பேசி சமாதானப்படுத்துவேன்.
நம்பிக்கை
அவர், எனக்கு அக்கா போன்றவர். குடும்பம் என்றால் பிரச்னை வரத் தான் செய்யும். அமர்ந்து பேசினால் எல்லாம் சரியாகும். எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.
பாகல்கோட் தொகுதி மக்களிடம், எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சம்யுக்தா வெற்றி பெற வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கவில்லை. கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர்.
விஜயானந்த் காசப்பனவர் குடும்பத்திற்கும், காங்கிரசுக்கும் 50 ஆண்டுகள் நட்பு உள்ளது. கட்சிக்காக அவர் நிறைய உழைத்துள்ளார். எனக்கு சீட் கொடுக்கப்பட்டதால் அவர், அமைதியாக இருக்கவில்லை.
பாகல்கோட் எம்.பி., கட்டிகவுடர் 20 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தும், தொகுதி பிரச்னைக்காக பார்லிமென்டில் குரல் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசவில்லை. நான் எம்.பி., ஆனால், பாகல்கோட் தொகுதி மக்கள் குரலாக, லோக்சபாவில் பேசுவேன். என்னை வெற்றி பெற வையுங்கள் என்று, மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

