ஹெப்பால் -- சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள் ஜன., 1க்குள் முடிக்க பெங்., மாநகராட்சி திட்டம்
ஹெப்பால் -- சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள் ஜன., 1க்குள் முடிக்க பெங்., மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூன் 21, 2024 05:40 AM
பெங்களூரு: ஹெப்பால் -- சென்ட்ரல் சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகளை, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் முடிக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டம் வைத்துள்ளது.
பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நகரை ஆட்கொண்டுள்ளன. இங்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வேலை செய்கின்றனர்.
உதிரி பாகங்கள்
இது தவிர ஆயத்த ஆடை, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உட்பட ஏராளமான தொழிற்சாலைகள், பெங்களூரு நகரில் செயல்பட்டு வருகின்றன. இதனால் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள், வேலை விஷயத்திற்காக பெங்களூரு வருகின்றனர் .
பெங்களூரு நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். மேலும் வேலைக்கு செல்வதற்கு வசதியாக பைக், கார்களும் வாங்கி கொள்கின்றனர்.
பெங்களூரு நகரில் தினமும் 10 லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
காலையில் வேலைக்கு செல்லும் போதும், மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
விமான நிலையம் செல்லும் சாலையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். இதில் சிக்கி, விமானத்தை பயணியர் தவறவிட்ட உதாரணங்களும் உண்டு. நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்த பாடில்லை.
இந்நிலையில், பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சராக இருக்கும், துணை முதல்வர் சிவகுமார் போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகரின் முக்கிய பகுதிகளில் சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்துள்ளார்.
இதன்படி ஹெப்பால் எஸ்டீம் மாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு வரை 18 கி.மீ.,க்கு சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ரூ.8,100 கோடி
இந்த பணிகள் குறித்து மாநகராட்சி தலைமை இன்ஜினியர் பிரஹலாத் அளித்த பேட்டி:
பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரே வழி, சுரங்கப்பாதைகள் அமைப்பது தான். தற்போது ஹெப்பால் எஸ்டீம் மாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு வரை 18 கி.மீ.,க்கு 8,100 கோடி ரூபாய் செலவில், சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
ஒவ்வொரு கி.மீ.,க்கும் 450 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இந்த பாதையின் உயரம் 10 மீட்டர் ஆகும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில், வாகனங்கள் செல்லலாம். தற்போது ஹெப்பால் எஸ்டீம் மாலில் இருந்து, சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு வரை, வாகனத்தில் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் 20 முதல் 25 நிமிடங்களில் சென்றடையலாம்.
சென்ட்ரல் சில்க் போர்டில் உள்ள கர்நாடக ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து துவங்கும் சாலை, லால்பாக், பெங்களூரு கோல்ப் கிளப், அரண்மனை மைதானம் வழியாக ஹெப்பால் எஸ்டீம் மாலை சென்றடைகிறது.
சாலையில் ஐந்து இடங்களில் நுழைவு, வெளியேறும் பகுதி அமைக்கப்படும். இந்த சாலையில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண தொகை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள், பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

