விடுதி, 'ஹோம் ஸ்டே'க்களில் தங்க ஹாசன் மாவட்ட நிர்வாகம் தடை
விடுதி, 'ஹோம் ஸ்டே'க்களில் தங்க ஹாசன் மாவட்ட நிர்வாகம் தடை
ADDED : ஏப் 13, 2024 06:07 AM
ஹாசன்: சமீப ஆண்டுகளில் பண்டிகை உட்பட பல்வேறு காரணங்களால் தொடர் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில், பெங்களூரு, துமகூரு, மைசூரு, ஷிவமொகா என, கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும், மக்கள் ஹாசனுக்கு வருவர். இங்குள்ள ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளில் தங்குவர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 26ல் நடக்கவுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ம் தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை. தொடர் விடுமுறையை பயன்படுத்தி, சுற்றுலா செல்ல பலரும் திட்டமிட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையில், வாக்காளர்கள் சுற்றுலா சென்றால் ஓட்டு சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. முந்தைய தேர்தலிலும், படித்தவர்களே ஓட்டு போடாமல் சுற்றுலா சென்றனர்.
இதை உணர்ந்துள்ள ஹாசன் மாவட்ட நிர்வாகம், புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, ஹாசன் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். இதை மனதில் கொண்டு, ஹாசன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓட்டு போடுவதை விட்டு விட்டு, ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளில் அமர்ந்திருக்க வேண்டாம்.
வரும் 26ல், ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. எனவே வரும் 24ம் தேதி மாலை 6:00 மணியில் இருந்து 26ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை, ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

