மூன்றாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்
மூன்றாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்
ADDED : ஏப் 13, 2024 01:28 AM
புதுடில்லி, மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி, 94 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்று துவங்கியது.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி துவங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் மே 7ம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
மூன்றாம் கட்ட தேர்தல், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி, டாமன் -- டையூ, ஜம்மு -- காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள, 94 லோக்சபா தொகுதிகளில் நடக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான செயல்முறையும் துவங்கியது.
வரும் 19 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். 20ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இத்துடன், மத்திய பிரதேசத்தின் பெதுல் லோக்சபா தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைக்கும் அறிவிப்பையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
பெதுல் தொகுதிக்கு இரண்டாம் கட்டமாக வரும் 26ம் தேதி தேர்தல் நடக்க இருந்தது. இந்நிலையில் அந்த தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

