ADDED : மார் 28, 2024 05:22 AM
பெங்களூரு : முதல் கட்டமாக கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று துவங்குவதால், கர்நாடக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் லோக்சபா தேர்தல், இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் துவங்குகிறது.
மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள். பணி நாட்களில் தினமும் காலை 11:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். மனுத் தாக்கல் செய்யும் மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மனுத் தாக்கல் துவங்க உள்ள நிலையில், கர்நாடக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியும்; காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ஏற்கனவே இரண்டு முறை பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்றனர்.
மற்ற தேசிய தலைவர்கள் இனிமேல் தான் கர்நாடகாவுக்கு வருவர். தலைவர்கள் எங்கெங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என, மாநில தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். எந்த தலைவர், எந்த தொகுதியில் பிரசாரம் செய்தால், கட்சிக்கு லாபம் ஏற்படும் என்பதை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

