'சர்க்கரை ஆலைகளிடம் தலா ரூ.50 லட்சம் வசூல்' அமைச்சர் சிவானந்த் பாட்டீல் மீது எத்னால் குற்றச்சாட்டு
'சர்க்கரை ஆலைகளிடம் தலா ரூ.50 லட்சம் வசூல்' அமைச்சர் சிவானந்த் பாட்டீல் மீது எத்னால் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 14, 2024 07:06 AM

பெலகாவி: ''லோக்சபா தேர்தல் செலவுக்காக, ஒவ்வொரு சர்க்கரை ஆலைகளிடமும், சர்க்கரைத்துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல், தலா 50 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டினார்.
பெலகாவி, அதானியில் நேற்று அவர் கூறியதாவது:
அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பாக, எடை இயந்திரங்கள் பொருத்தி, விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க செய்வதாக, சட்டசபையில் அமைச்சர் சிவானந்த் பாட்டீல் கூறியிருந்தார். ஆனால் இப்போது தன் மகள், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால், தன் வாக்குறுதியை மறந்து, அனைத்து சர்க்கரை ஆலைகளிடமும், தலா 50 லட்சம் ரூபாய் கேட்கிறார்.
சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம், தலா 50 லட்சம் ரூபாய் வசூலிக்க, ஏஜென்டுகளை நியமித்துள்ளார். நானும் சர்க்கரை உரிமையாளர் என்பதால், ஏஜென்ட் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, 50 லட்சம் ரூபாய் கேட்டார். ஆனால் நான் பணம் கொடுக்க மறுத்தேன். என் சர்க்கரை ஆலை முன், பத்து எடை இயந்திரங்கள் பொருத்தும்படி கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரது குற்றச்சாட்டை மறுத்து, அமைச்சர் சிவானந்த் பாட்டீல், நேற்று கூறியதாவது:
சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம், நான் 50 லட்சம் ரூபாய் கேட்டதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன். ஒருவேளை குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால், எம்.எல்.ஏ., எத்னால் அரசியலை விட்டு செல்ல வேண்டும்.
விஜயபுரா தொகுதியில், அவர் சுயேச்சையாக போட்டியிட்டு, என்னை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலும், நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

