டில்லி செல்கிறார் ஈஸ்வரப்பா: அமித் ஷா சமரசத்தை ஏற்பாரா?
டில்லி செல்கிறார் ஈஸ்வரப்பா: அமித் ஷா சமரசத்தை ஏற்பாரா?
ADDED : ஏப் 02, 2024 11:15 PM

ஷிவமொகா: மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பை ஏற்று, பா.ஜ., அதிருப்தி தலைவர் ஈஸ்வரப்பா இன்று டில்லி செல்கிறார்.
லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில், தன் மகன் காந்தேஷுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா போட்டியிடும் ஷிவமொகாவில், சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
அவரது போர்க்கொடியால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என மேலிடத்துக்கு தெரியவந்தது. இந்நிலையில், பெங்களூரு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈஸ்வரப்பாவை மொபைல் போனில் நேற்று காலை அழைத்து பேசினார். அப்போது, 'டில்லிக்கு வாருங்கள், உங்கள் அதிருப்தி குறித்து விரிவாக பேசலாம்' என்று அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து, ஷிவமொகாவில் தன் ஆதரவாளர்களுடன் ஈஸ்வரப்பா திடீரென அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் கூறியதாவது:
அமித் ஷா என்னை தொடர்பு கொண்டது உண்மை. அவரது அழைப்பை ஏற்று, இன்று டில்லி செல்கிறேன். நாளையே மாநில தலைவரை மாற்றினால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அமித் ஷாவிடம் கூறிவிட்டேன்.
இல்லை என்றால், பிரதமர் மோடியே சொன்னாலும், சுயேச்சையாக போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். சுயேச்சையாக போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று அவர் கால்களில் விழுந்து, புரிய வைப்பேன்.
அப்பா, மகன்கள் கைகளில் மட்டுமே, ஒரு கட்சி இருக்க கூடாது என்பது என் கோரிக்கை. தன் மகன் தோல்வி அடைந்து விடுவார் என்று கருதி, எடியூரப்பா என் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று டில்லி செல்லும் ஈஸ்வரப்பா, அமித் ஷாவின் பேச்சுக்கு அடங்குவாரா அல்லது சுயேச்சையாக போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

