கழிவுநீர் தொட்டி சுத்தம் 10 நாட்களில் எட்டு பேர் பலி
கழிவுநீர் தொட்டி சுத்தம் 10 நாட்களில் எட்டு பேர் பலி
ADDED : மே 16, 2024 11:44 PM
புதுடில்லி:உத்தர பிரதேசம் மற்றும் டில்லியில் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது, கடந்த 10 நாட்களில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த ஆர்வலர்கள், கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
தலித் ஆதிவாசி சக்தி அதிகார மஞ்ச் மற்றும் ஜஸ்டிஸ் நியூஸ் என்ற அமைப்புகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள், கடந்த 10 நாட்களில் மட்டும் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தபோது உயிரிழந்தவர்களை பட்டியலிட்டு கூறியதாவது:
நாட்டில் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வது தொடர்கிறது. இந்த அவல நிலையை போக்க வேண்டும். எட்டு பேர் உயிரிழந்த வெவ்வேறு சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய எந்த நெறிமுறை, இயந்திரங்கள் அல்லது ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாமல் தொழிலாளர்கள் நுழைய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.
மனித முயற்சியால் கழிவுகள் அகற்றுதல் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் சட்டம் உள்ளது. ஆனால் இதுவரை யாருக்கும் வேலை வழங்கியதாக உதாரணம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

