'ரீல்ஸ்' பிரபலம் சோனுவிடம் ராய்ச்சூரில் விசாரிக்க முடிவு
'ரீல்ஸ்' பிரபலம் சோனுவிடம் ராய்ச்சூரில் விசாரிக்க முடிவு
ADDED : மார் 23, 2024 11:12 PM

பெங்களூரு: சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்த வழக்கில் கைதாகி உள்ள, 'ரீல்ஸ்' பிரபலம் சோனு சீனிவாஸ் கவுடாவை, ராய்ச்சூர் அழைத்துச் சென்று விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாண்டியாவை சேர்ந்தவர் சீனிவாஸ் கவுடா. இவரது மகள் சோனு, 29. 'கன்னட பிக்பாஸ்' 8வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பெங்களூரு பேடரஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரீல்ஸ் வீடியோ தயாரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வேலையாக வைத்திருந்தார்.
இந்நிலையில் 8 வயது சிறுமியுடன், ரீல்ஸ் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் சோனு வெளியிட்டார். அந்த சிறுமியை தத்தெடுத்ததாகவும் கூறி இருந்தார். அந்த சிறுமியை சோனு, சட்டவிரோதமாக தத்தெடுத்தது தெரிந்தது.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி கீதா ஆனேக்கல் அளித்த புகாரில், நேற்று முன்தினம் சோனுவை, பேடரஹள்ளி போலீசார் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, பெங்களூரு ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் பெற்றோர் ராய்ச்சூரை சேர்ந்தவர்கள் என்பதால், சோனுவை ராய்ச்சூருக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும், பேடரஹள்ளி போலீசார் முடிவு செய்து உள்ளனர். இன்று ராய்ச்சூர் அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. நாளையுடன் அவரது போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது.
சோனு கைதான பின்னரும், சிறுமியுடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, இன்னும் அழிக்கப்படவில்லை.

