ADDED : ஏப் 16, 2024 05:39 AM

பெலகாவி, : கொலை மிரட்டல் விடுத்ததாக, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மீது, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல், போலீசில் புகார் செய்து உள்ளார்.
பெலகாவி ரூரல் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பெலகாவி ஹிண்டல்காவில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பேசும்போது, 'பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பெருகும் ஆதரவை பார்த்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு துாக்கம் வராது.
ஒரு 'பெக்' சரக்கு அடித்தால் துாக்கம் நன்றாக வரும்' என்று கூறி இருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பெலகாவி ஷகாபூரில் உள்ள சஞ்சய் பாட்டீல் வீட்டின் முன்பு, நேற்று முன்தினம் இரவு மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஷகாபூர் போலீஸ் நிலையத்தில் சஞ்சய் பாட்டீல் நேற்று அளித்த புகாரில், 'எனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய மகளிர் காங்கிரசார் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீசினர்; கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதற்கு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தான் காரணம். அவர் மீதும், என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.

