ADDED : ஆக 19, 2024 10:43 PM

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் என்றாலே ஆன்மிகத்துக்கு பெயர் பெற்றவை என்று பலருக்கும் தெரியும். மற்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் விமான கோபுரம் இருக்கும். ஆனால், கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் கோபுரம் இருக்காது. கேரளா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும்.
தட்சிண கன்னடா மாவட்டம், சவுதட்காவில் உள்ள மஹாகணபதி கோவில் சற்று வித்தியாசமான முறையில், திறந்த வெளியில் அமைந்துள்ளது. பெலதங்கடி தாலுகாவின் கொக்கடாவில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் இந்த கோவில் உள்ளது.
35 கி.மீ., துாரம்
குக்கே சுப்பிரமணியா கோவிலில் இருந்து 35 கி.மீ., துாரத்திலும்; தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் இருந்து 16 கி.மீ., துாரத்திலும் மஹா கணபதி கோவில் உள்ளதால், பக்தர்கள் சுலபமாக சென்று வருவதற்கு வசதி உள்ளது.
இத்தலத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால், மஹா கணபதிக்கு மூலஸ்தானம் கிடையாது. கோவில் அமைப்பு இல்லாமல், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலுக்கு இடையில் திறந்த வெளியில் காட்சி அளிக்கிறார். இதனால், 24 மணி நேரமும் சாமி தரிசனம் செய்யலாம்.
ஒரே கருங்கல்லில் சாமி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக, மணிகளை கட்டி வேண்டி கொள்கின்றனர்.
கோவிலுக்குள் நிறைய குரங்குகளை காணலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் மஹாபூஜை நடைபெறும்.
கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கபிலா ஆற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளதால், ஆற்றில் புனித நீராடி விட்டு கோவிலுக்கு வருவது சிறப்பு.
வெள்ளரிக்காய்
புராணத்தின் படி, ஒரு அரச குடும்பத்தினர் மஹா கணபதியை வணங்கி வந்ததாகவும், எதிரிகள் முற்றுகையின் போது, கணபதி விக்ரஹத்தை காப்பாற்றி, வெள்ளரிக்காய் அதிகம் விளைந்த இடத்தில் நிறுவியதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி விவசாயிகள் வெள்ளரிக்காய்களை பறித்து, கணபதிக்கு 'சமர்ப்பணம்' செய்தனர் என்று நம்பப்படுகிறது.
சவுதே என்றால், கன்னடத்தில் வெள்ளரி என்று பொருள். அட்கா என்றால், புல்வெளி என்று பொருள். எனவே சவுதட்கா என்றால், 'வெள்ளரி புல்வெளி' என்று பொருள்படுகிறது.
இந்த கோவிலில், பஞ்சகஜ்ஜாய சேவை மற்றும் மூடப்பா எனும் அப்பம் சேவை மிகவும் பிரபலம். இந்த சேவையை செய்து, பக்தியுடன் வேண்டி கொண்டால், நினைத்த காரியம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
விமானத்தில் வருவோர், மங்களூரு வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ்சில் வரலாம். ரயிலில் வருவோர், குக்கே சுப்பிரமணியா வரை வந்து, அங்கிருந்து பஸ்சில் வரலாம். பஸ்சில் வருவோர், தர்மஸ்தலா வந்து, அங்கிருந்து, வேறு பஸ்சில் வரலாம். சொந்த வாகனத்தில் வந்தால், அருகில் உள்ள மற்ற ஆன்மிக தலங்களுக்கு செல்லலாம்.
- நமது நிருபர் -

