கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித் ஷா டில்லியில் ஈஸ்வரப்பா ஏமாற்றம்
கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித் ஷா டில்லியில் ஈஸ்வரப்பா ஏமாற்றம்
ADDED : ஏப் 04, 2024 04:58 AM

ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, டில்லி வரும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். நேற்று இரவு இருவரும் சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில், இந்த சந்திப்பை அமித் ஷா ரத்து செய்துவிட்டார்.
வேட்புமனு தாக்கல்
பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. லோக்சபா தேர்தலில் மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி தொகுதி பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 'காந்தேஷுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான் காரணம்' என, ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார்.
ஷிவமொகாவில் எடியூரப்பா மகன் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய தயாராகி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா வந்த அமித் ஷா, ஈஸ்வரப்பாவிடம் மொபைல் போனில் பேசினார். டில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். நேற்று காலை தொகுதியில் வழக்கம்போல பிரசாரம் செய்த ஈஸ்வரப்பா, மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். இரவு விமானத்தில் டில்லி சென்றார்.
அங்கு உள்ள நட்சத்திர ஹோட்டலில் அமித் ஷாவை, அவர் சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சந்திப்பை, அமித்ஷா ரத்து செய்து விட்டார்.
நேற்று காலை ஆதரவாளர்களுடன் ஆலோசித்த ஈஸ்வரப்பா, டில்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுவேன். அவர் போட்டியில் இருந்து, பின்வாங்குமாறு கூறினாலும் கேட்க மாட்டேன். சுயேச்சையாக வெற்றி பெற்று, பிரதமர் மோடி முன்பு செல்வேன் என்று கூறி உள்ளார்.
பிரதமரின் ஆசி
சந்திப்பு ரத்து ஆனது குறித்து, ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
என்னிடம் அமித் ஷா மொபைல் போனில் பேசினார். ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிட வேண்டாம். நீங்கள் மூத்த தலைவர் என்று கூறினார். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பம் கையில் சிக்கி இருப்பது போல, கர்நாடகா பா.ஜ., தந்தை, மகன் கையில் சிக்கி இருப்பது பற்றி, அவரிடம் கூறினேன்.
ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரவி, பிரதாப் சிம்ஹா, பசனகவுடா பாட்டீல் எத்னால், அனந்த்குமார் ஹெக்டே, சதானந்த கவுடாவுக்கு, கட்சியில் நடந்த அநீதி பற்றியும் அவரிடம் எடுத்து கூறினேன்.
மகன்கள் அரசியல் எதிர்காலத்திற்காக எடியூரப்பா செய்யும், சமரச அரசியல் பற்றியும் கூறினேன். எல்லாவற்றையும் கேட்ட அமித்ஷா, டில்லி வரும்படி என்னிடம் கூறினார். நானும் வந்தேன். கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்தாகி விட்டது. என்னை அவர் புறக்கணித்ததாக நினைக்கவில்லை.
ஷிவமொகாவில் நான் சுயேச்சையாக போட்டியிட்டு, ராகவேந்திராவை தோற்கடிக்க வேண்டும் என்று, அமித் ஷா நினைக்கிறார் என்பதை, புரிந்து கொண்டேன். பிரதமர் மோடி, அமித் ஷா ஆசியால் வெற்றி பெறுவேன். பா.ஜ.,வில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு சீட் என்ற கொள்கை உள்ளது. நான் எந்த பதவியிலும் இல்லை. இதனால் எனது மகனுக்கு சீட் கேட்டேன். இதில் என்ன தவறு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

