ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு போட்டியின்றி தேர்வாகிறார் மேயர்?
ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு போட்டியின்றி தேர்வாகிறார் மேயர்?
ADDED : ஏப் 19, 2024 12:29 AM

புதுடில்லி:டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி வேட்பாளராக, தேவ்நகர் வார்டு கவுன்சிலர் மகேஷ் கிச்சி வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேயரும், துணை மேயரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டில்லி முனிசிபல் கவுன்சிலில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள் உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கு 104 கவுன்சிலர்கள் உள்ளனர்.
மூன்றாம் ஆண்டு மேயர் பதவி எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி ரகசிய ஓட்டெடுப்பு மூலம் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், மேயர் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்ய ஆம் ஆத்மி ஆலோசனை நடத்தி வந்தது. மூன்று பெயர்களை பரிசீலித்து வந்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறின.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் அக்கட்சியின் டில்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், எம்.எல்.ஏ.,வும் முனிசிபல் கவுன்சில் பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:
மேயர் பதவிக்கு தேவ்நகர் வார்டு கவுன்சிலர் மகேஷ் கிச்சி, 45, துணை மேயர் பதவிக்கு அமன் விஹார் கவுன்சிலர் ரவீந்தர் பரத்வாஜ், 35, ஆகியோர் போட்டியிடுவர். இருவரும் உடனே வேட்புமனுத் தாக்கல் செய்வர். கட்சியுடன் மகேஷ் கிச்சி நீண்டகால தொடர்பில் இருக்கிறார். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை துவக்கியதில் இருந்தே, கட்சியுடன் தொடர்புடையவர். அவர் ஓட்டுச்சாவடி அளவிலான தலைவராகவும், வார்டு அளவிலான தலைவராகவும், விதான சபா ஊழியராகவும் பணியாற்றினார்.
பிற மாநிலங்களின் தேர்தல் பிரசாரங்களில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. கட்சித் தொண்டர்களுடன் நல்ல தொடர்புடையவர். மாநகராட்சி பிரச்னைகள் பற்றி நன்கு அறிந்தவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது மாநில அமைச்சர்கள் ஆதிஷி, சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உடன் இருந்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஆம் ஆத்மி சார்பில் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பா.ஜ., சார்பிலோ சுயேச்சையாகவோ யாரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.
போட்டியில்லாததால், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. இருவரும் ஒரு வருடத்திற்கு பொறுப்பில் இருப்பர்.

