/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சமையல் எண்ணெய் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு
/
சமையல் எண்ணெய் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு
சமையல் எண்ணெய் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு
சமையல் எண்ணெய் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு
ADDED : ஆக 05, 2025 12:35 AM

புதுடில்லி, சமையல் எண்ணெய் பொருட்கள், தயாரிப்பு, சந்தை இருப்பை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமையல் எண்ணெய், தாவர எண்ணெய் வணிகத்தில் வெளிப்படைத்தன்மை, கூடுதல் கண்காணிப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இந்த விதிகள், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளில் முக்கிய மாற்றங்கள்:
1 கட்டாய பதிவு: அனைத்து தாவர எண்ணெய் உற்பத்தியாளர்களும் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். டில்லியில் உள்ள சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய் இயக்குனரகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆலையின் முகவரி, உற்பத்தித் திறன், இயக்கம் குறித்த தகவல்கள் விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும்.
2 தகவல் அளிப்பது கட்டாயம்: விரிவான மாதாந்திர அறிக்கையை உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்வது கட்டாயமாகிறது. எண்ணெய் பயன்பாடு, உற்பத்தி, விற்பனை, சரக்கு இருப்பு ஆகியவை அவற்றில் இடம்பெற வேண்டும். சமையல் எண்ணெய் வினியோக தொடரை கண்காணிக்கவும், பதுக்கலை தடுக்கவும், தவறான தகவலை தவிர்க்கவும் மாதாந்திர தகவல் அறிக்கை தாக்கல் கட்டாயமாகிறது.
3 கூடுதல் அதிகாரம்: எண்ணெய் ஆலைகள், அலுவலகங்களை இயக்குனரக அதிகாரிகள் நேரில் பார்வையிடவும், ஆவணங்களை கேட்டு சரிபார்க்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. விதிமீறல்கள் தெரிய வந்தால், கையிருப்பை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
4 காலத்துக்கு பொருந்தாத விதிகள்: ஏற்கனவே உள்ள, சமையல் எண்ணெய், தாவர எண்ணெய் வணிகத்துக்கான விதிகளில், காலத்துக்கு ஒவ்வாத வார்த்தைகள், வாக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் விதிகளுக்கான வார்த்தைகள், வாக்கியங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
5 விதிமீறலுக்கு அபராதம்: மாத அறிக்கை தாக்கல் செய்யாதது, விதிகளை மீறுவது ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
6 தரவுகளின் தரத்தில் கவனம்: சட்டம் இயற்றுவோர், நுகர்வோர், உற்பத்தியாளர்களுக்கு உதவும் நோக்கிலான, நம்பகமான தரவுகள் வழங்க, புதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொ ழிலுக்கு தரவு சேகரிப்பில் ஏற்படும் சவாலை தவிர்த்து, மேம்பாட்டுக்கு உதவ இந்த புதிய விதிகள் வகை செய்கின்றன.
இதுபோன்ற மாற்றத்தால், சமையல் எண்ணெய் விலை நிலைத்தன்மை, தரம், வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.