/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாயமான வாலிபர் அடித்து கொலை 2 ஆண்டுக்கு பின் உண்மை அம்பலம்
/
மாயமான வாலிபர் அடித்து கொலை 2 ஆண்டுக்கு பின் உண்மை அம்பலம்
மாயமான வாலிபர் அடித்து கொலை 2 ஆண்டுக்கு பின் உண்மை அம்பலம்
மாயமான வாலிபர் அடித்து கொலை 2 ஆண்டுக்கு பின் உண்மை அம்பலம்
ADDED : ஆக 13, 2025 10:58 PM

ஹாசன்: தந்தையின் இறுதி சடங்குக்கு மகன் வராததால், அவரை தேடிய போது அவர் கொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்தது.
ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவின், சந்தபசவனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் கங்காதர், 60. இவருக்கு ரகு, 32, ரூபேஷ், 35, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரூபேஷ் மன நலம் சரியில்லாதவர். ரகு பி.எம்.டி.சி.,யில் பணியாற்றி வந்தார்.
பெங்களூரில் வசித்த இவர் அவ்வப்போது, சொந்த ஊருக்கு வருவார். இவர் திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரகு வரவே இல்லை. இது குறித்து அக்கம், பக்கத்தினர், உறவினர்கள் கேள்வி எழுப்பிய போது, ஊரில் இருப்பதாக கூறினர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி, கங்காதர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். அவரது முகத்தை பார்க்கவும், இளைய மகன் ரகு வரவில்லை. 11வது நாள் காரியம் நடத்தவும் அவர் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், ரகுவை உடனடியாக அழைத்து வரும்படி நெருக்கடி கொடுத்தனர். அப்போது ரூபேஷ், தற்போது ரகு கொலை செய்யப்பட்ட விஷயத்தை அம்பலப்படுத்தினார்.
பி.எம்.டி.சி.,யில் பணியாற்றிய ரகுவுக்கு, சீட்டாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் இருந்தன. இதில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார்.
வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்து வசிக்க துவங்கினார். தன் கடனை அடைக்க பணம் தரும்படி, தந்தையை இம்சித்தார். 2023 ஆகஸ்ட் 14ம் தேதி, இதே காரணத்தால், தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது.
அப்போது கங்காதர், இரும்பு ராடால், மகன் ரகுவை அடித்து கொலை செய்தார். அதன்பின் மூத்த மகன் ரூபேஷுடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள பள்ளத்தில் புதைத்தார்.
கொலை விஷயத்தை யாரிடமாவது கூறினால், உன்னையும் கொல்வேன் என, தந்தை மிரட்டியதால் ரூபேஷ் பயந்து மவுனமாக இருந்ததாக கூறினார்.
இது குறித்து, ரகுவின் தாய்மாமா பாலாக்ஷா, ஆலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கிராமத்துக்கு வந்து, ரூபேஷ் அடையாளம் காட்டிய இடத்தில் நேற்று முன்தினம் தோண்டி, ரகுவின் எலும்புகூட்டை வெளியே எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர்.
இது குறித்து, ரூபேஷிடம் விசாரணை நடத்துகின்றனர்.