/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் சித்துவின் நிதி ஆலோசகர் மீது கல்வீச்சு
/
முதல்வர் சித்துவின் நிதி ஆலோசகர் மீது கல்வீச்சு
ADDED : ஜன 27, 2026 04:52 AM

கொப்பால்: பெனகல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு கூட்டத்தில், முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி மீது கல் வீச்சு நடந்தது.
கொப்பால் மாவட்டம், குகநுார் தாலுகா பெனகல் கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு, மக்கள் தொடர்பு கூட்டம் நடந்தது. இதில், முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பங்கேற்றார். காங்கிரஸ் அரசின் சாதனைகள் குறித்து விவரித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது ஒரு கல் வந்து விழுந்தது.
முதலில் கல்லெறிந்தது, பா.ஜ., தொண்டர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பின் விசாரித்த போது, கல்லெறிந்தது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது. இதற்கு முன்னரும் கிராமத்தில் நிகழ்ச்சி நடந்த போது, அவர் கல்லெறிந்துள்ளார்.
அதன்பின் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது:
காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. அவற்றில், 'சக்தி' திட்டம், நாட்டிலேயே முன் மாதிரியாக அமைந்துள்ளது. ஏற்கனவே மாநிலத்தில், 600 கோடி முறை பெண்கள், இத்திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர். இதற்காக 21,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
'சந்தியா சுரக்ஷா' திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை, விதவை உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு அரசு கணிசமாக செலவிட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விமர்சிப்பவர்கள், இதை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

