ADDED : ஜன 27, 2026 04:53 AM

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை நகராட்சி ஸ்டேடியத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமை வகித்தார்.
தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் தேசியக்கொடி ஏற்றினார். தங்கவயல் மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, சாரணர், சாரணியர் என, 11 பிரிவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களின் பலவகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தங்கவயல் தாசில்தார் பரத், நகராட்சி ஆணையர் ஸ்ரீதர், வட்டார கல்வி அதிகாரி அனிதா, உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், எம்.எல்.ஏ., ரூபகலா பேசுகையில், ''கர்நாடகாவின் முதல் முதல்வர் கே.சி.ரெட்டி பிறந்த கேசம்பள்ளியில், 20 கோடி ரூபாய் செலவில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி, மாதிரி அங்கன்வாடி அமைக்க 1 கோடியே, 50 லட்சம் ரூபாய், 550 கோடி ரூபாயில் போலீஸ் பயிற்சி நிலையம், 10 ஏக்கரில் 9 கோடி ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பூங்கா, 15 கோடியில் புத்த தியான மண்டபம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
' 'இன்டஸ் ட்ரியல் பார்க், இன்டகிரேடெட் டவுன் ஷிப் அமைக்கவும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் பெமல் பாதுகாவலர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அணி வகுப்பு மரியாதையுடன், பெமல் நிர்வாக நிதித்துறை இயக்குநர் அனில் ஜரத், தேசியக் கொடி ஏற்றினார்.
தேசிய நலனுக்காக உயிர் நீத்த தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்தார். பெமல் உற்பத்திகளின் சாதனைகளை பட்டியலிட்டார். விழாவில் பெமல் அதிகாரிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

