/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிலதிபரை கடத்த 'ஐடியா' 3 மாதத்துக்கு பின் ரவுடி கைது
/
தொழிலதிபரை கடத்த 'ஐடியா' 3 மாதத்துக்கு பின் ரவுடி கைது
தொழிலதிபரை கடத்த 'ஐடியா' 3 மாதத்துக்கு பின் ரவுடி கைது
தொழிலதிபரை கடத்த 'ஐடியா' 3 மாதத்துக்கு பின் ரவுடி கைது
ADDED : நவ 27, 2025 07:19 AM

மாண்டியா: பெங்களூரில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ரவுடி, 'பேக்கரி' ரகு, மூன்று மாதங்களுக்கு பின், மாண்டியா அருகில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் மனோஜ் குமார். இவருக்கு தெரிந்த நபரான ராஜேஷ், கன்னட திரைப்பட இயக்குனருக்கு இவரிடம் இருந்து 1.20 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார்.
ஓராண்டு கடந்த பின்னரும் பணத்தைத் திருப்பித் தராததால், ராஜேஷிடம் மனோஜ் குமார் கேட்டார். அவரும் வாங்கித் தருவதாக கூறி, ஆக., 26ம் தேதி ராஜாஜி நகரில் உள்ள மோடி மருத்துவமனை சதுக்கத்துக்கு வரும்படி, மனோஜ் குமாரை அழைத்தார்.
அங்கு வந்த மனோஜ் குமாரை, மற்றொரு காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். நகரின் பல பகுதிகளில் சுற்றினார். அப்போது காரில் மேலும் நான்கைந்து பேர் ஏறினர். அவர்களுடன் சேர்ந்து ராஜேஷ், மனோஜ்குமாரை கத்திமுனையில் மிரட்டி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த 2.96 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தனர்.
பின், மேலும் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். அவரும் தருவதாக கூறினார். மறுநாள் மதியம் ஞானபாரதி வளாகம் அருகில் இறக்கி விட்டு சென்றனர்.
சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மனோஜ் குமார் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், இரண்டு நாட்களில் ராஜேஷ், சீனா, லோகேஷ் குமார், நவீன் குமார், சோமய்யா, யுகேஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரித்தபோது, தொழிலதிபரை கடத்தும் யோசனை அளித்தது, ரவுடி 'பேக்கரி' ரகு என்பது தெரியவந்தது. அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், ரகு, மாண்டியா நகரின் தாபா அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
அவர் மீது பெங்களூரின் 10 போலீஸ் நிலையங்களில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்துடன், அவரை கைது செய்ய முயற்சித்த போது, பெண் போலீசாரை தடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாண்டியா ரூரல் போலீசில் மேலும் ஒரு புகார் பதிவாகி உள்ளது.
தொழிலதிபரை கடத்திய வழக்கில் மூன்று மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

