ADDED : ஜூலை 29, 2026 02:52 AM

பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், பிலகி தாலுகா காலகல்லி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் அசோக், 29. இவரது மனைவி பாக்யஸ்ரீ, 23. இவர்களுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாக்யஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இதனால், பாக்யஸ்ரீ, தன் கணவருடன் கோபித்து, குழந்தையுடன் தன் தாய் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கியிருந்தார்.
அவரை சமாதானம் செய்த பிரவீன், தன்னுடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தார். அன்று இரவே இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.
கோபம் அடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தார். பின், அவரை துாக்கில் தொங்கவிட்டார். அவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, தனது மாமனார், மாமியாருக்கு வாட்ஸாப்பில் வீடியோ கால் செய்து காண்பித்தார். மேலும், துாக்கில் தொங்கிய நிலையில் பாக்யஸ்ரீ உயிரிழந்து கிடக்கும் வீடியோவை மாமியார், மாமனார், நண்பர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார்.
இது குறித்து, பாக்யஸ்ரீயின் பெற்றோர், பிலகி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார், வீட்டில் படுத்திருந்த பிரவீனை கைது செய்தனர்.
இது குறித்து, மாவட்ட எஸ்.பி., சித்தார்த் கோயல் நேற்று கூறியதாவது:
பாக்யஸ்ரீயின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து, அவரை துாக்கிலிட்டு கொலை செய்து உள்ளார். அவரது உடல்களின் பிற பகுதிகளிலும் காயங்கள் உள்ளன. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் பீர் பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பெண்ணுக்கு மது கொடுத்து கொலை செய்யப்பட்டதா என விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
